சென்னை,
கடந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக, அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
புதிய மாநிலத்தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் தலைமை யில் பா.ஜ.க. தேர்தலை சந்தித்தது. பட்டும்படாமல் தேர்தல் களத்தில் அண்ணாமலை பணியாற்றினார். அ.தி.மு.க.விடம் 27 இடங்களை கேட்டு வாங்கிய பா.ஜ.க. ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.
கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களான மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் தோல்வியை தழுவினர். நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற 11 சதவீத வாக்கு, 2 சதவீதமாக குறைந்து போனது.
இதற்கிடையே, பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் பா.ஜ.க.வில் இருந்து ராஜினாமா செய்கிறார், புதிய கட்சியை தொடங்குகிறார் என்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் ரெக்கை கட்டி பறந்தது.
அதற்கேற்ப தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து 5 பக்க கடிதத்தையும் அளித்தார். தொடர்ந்து. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும், தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷையும் அவர் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் அண்ணாமலையிடம், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம், கொஞ்சம் காத்திருக்கவும் என்று கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச அண்ணாமலை திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக அவர் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இருப்பினும், அண்ணாமலை தன்னுடைய ராஜினாமா முடிவில் சற்றும் பின்வாங்க போவதில்லை என்ற உறுதியோடு இருந்ததாக சொல்லப்பட்டது.
இந்த சூழலில், மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனை உடனடியாக டெல்லி வர வேண்டும் என்று தேசிய தலைமை உத்தரவிட்டது. பா.ஜ.க.வின் அடுத்தடுத்த இந்த நிகழ்வுகள் தமிழக அரசியல் களமும், தமிழக பா.ஜனதாவும் பெரும் அதிர்வை கண்டது. அண்ணாமலை மத்திய தலைமையிடம் தெரிவித்த புகாரின் அடிப்படையிலே நயினார் நாகேந்திரன் அழைக்கப்பட்டார் என்ற தகவல் கசிந்து பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
பா.ஜ.க.வின் தலைமையை ஏற்று அண்ணாமலை மீண்டும் பா.ஜ.க.வில் தொடருவாரா? அல்லது அடுத்தகட்டமாக என்ன மாதிரியான முடிவை எடுக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் தொற்றி கொண்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புதிய தகவல் ஒன்று வெளியானது. அதில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய அண்ணாமலை, தனிக்கட்சி ஒன்றை புதிதாக தொடங்க இருப்பதாகவும், அது மதசார்பற்ற கொள்கை கொண்ட கட்சியாகவும், தமிழ்நாட்டை அடிப்படையாக வைத்து இயங்கக்கூடிய கட்சியாகவும் இருக்கும் என்றும், முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தியே அந்த கட்சி செயல்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் புது கட்சி தொடர்பான அறிவிப்பை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த அதிரடி அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று தமிழக மக்களும் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
இந்த சூழலில் அண்ணாமலையின் விலகலை பா.ஜ.க தலைமை இன்று உறுதி செய்தது. இதுதொடர்பாக பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமையகப் பொறுப்பாளர் அருண் சிங் வெளியிட்டிருந்த அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அவர்கள், தமிழக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொண்டார்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாஜக மீது கடும் குற்றம் சாட்டி அண்ணாமலை வீடியோ பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில், “புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம் இன்று முதல் தொடங்குகிறது. என்னுடைய கருத்துக்கு பாஜக தலைமை செவிசாய்க்கவில்லை. எதிர்காலத்தை நோக்கி பயணப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. எதிர்காலம் என்னை அழைத்துச் செல்லும் பாதையில் பயணிக்க வேண்டிய நேரம் இது.
ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தேன். என்னுடைய பாதை வேறு என பாஜக மேலிடத்திடம் தெரிவித்துள்ளேன். தமிழர் பண்பு என்பதால் பாஜக மேலிடத்திடம் கூற டெல்லி வந்துள்ளேன். புதிய அரசியல் இயக்கம் என முடிவெடுத்துள்ளேன்.
ஆனந்தமாக.. அன்போடு தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை நாம் தொடங்க இருக்கிறோம். தமிழ்நாட்டில் அடுத்து நடக்க உள்ள தேர்தலில் நமது அரசியல் கட்சி போட்டியிடும். பாஜக உடன் கடந்த 18 மாதங்களாக கருத்து வேறுபாடு நீடித்தது. கடந்த டிசம்பர் 4ம் தேதியே பாஜகவில் இருந்து விலகுவதை தெரிவித்துவிட்டேன். தேசிய கட்சிகளின் மொழி தமிழ்நாடு மக்களுக்கு புரியவில்லை. தேசிய கட்சிகள் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பேசுவதில்லை
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் வகையில் பேச முடியும் என நான் கடுமையாக முயற்சி செய்து குறிப்பிட்ட அளவில் வெற்றி பெற்றேன். பாஜகவில் இருந்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத் தந்தது இல்லை. தமிழ்நாட்டின் அடையாளத்தோடு பாஜக இருக்க வேண்டும் என விரும்பினேன்
பாஜகவில் இணைவதற்கு ஒரு நாள் முன்பு, 2020ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடமிருந்து அவரது இயக்கத்தில் இணைய அழைப்பு வந்தது. மூன்று காரணங்களுக்காக அந்த அழைப்பை மறுத்தேன்.
ரஜினியின் அழைப்பை ஏற்க மறுத்து பாஜகவில் இணைவதாக அவரிடம் தெளிவாகக் கூறினேன்.
தமிழ்நாட்டின் அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும்; Cult Politics-இல் இருந்து வெளியே வர வேண்டும். நம் கட்சியில் நிரந்தரத் தலைவர், நிரந்தர எம்பி, எம்எல்ஏ கிடையாது. நமது இயக்கத்தின் கொள்கையே..மாறுவோம்... மாற்றுவோம்.
அப்துல்கலாம் சென்டர் பார் எத்திக்ஸ் அண்ட் பாலிட்டிக்ஸ் என்ற பெயரில் அரசியல் பயிற்சி மையம் உருவாக்கப்படும். அங்கு முறையான பயிற்சி வழங்கப்படும். அரசியல் இயக்கம் சரியான நேரத்தில் கட்சியாக மாறும்.
பாஜகவின் கொள்கைகளை மறுப்பதாக இருந்தால் நேரடியாக மறுப்பேன். அதிமுக, திமுக போல்தான் பாஜகவையும் பார்ப்பேன்
முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டு வந்து, பிறகு அரசியல் சொல்லிக்கொடுத்து கட்சியாக மாற்றுவேன். தமிழ்நாட்டின் அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும் என்பதே விருப்பம். சிறந்த மூளைகளை அரசியலுக்கு கொண்டுவருவேன்; அதற்கு சிறிதுகாலம் அவகாசம் தேவை. சமரசமில்லாத கொள்கை கொண்ட இயக்கமாக வழிநடத்துவதே என் இலக்கு” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் இந்த பதிவு தமிழகத்தை பரபரப்பாக்கி உள்ளது.
இந்நிலையில் தனது இயக்கத்திற்கு உறுப்பினர் சேர்க்கையை அண்ணாமலை தொடங்கினார்.
’இது நம்ம இயக்கம்’ என்ற பெயரில் உறுபினர்கள் இணையும் வகையில் இணையதள முகவரியையும் (https://wetheleader.org/) அண்ணாமலை பகிர்ந்துள்ளார்.
அண்ணாமலை இயக்கத்தில் இதுவரை 50,000க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
ஏற்கனவே தமிழக அரசியல் களத்தில் விஜய் புதுப்பாதையை வகுத்து, இளம் தலைமுறையினரின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்கிறார். இந்த சூழலில், ஏற்கனவே இளைஞர்கள் வட்டாரத்தை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்ததோடு, தமிழக அரசியலில் புது சக்தியாகவும் உருவெடுத்து வந்த அண்ணாமலை தற்போது புதுக்கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் புதிய ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளார்.