யானை கூட்டம்  
தமிழக செய்திகள்

“போவோமா ஊர்கோலம்... பூலோகம் எங்கெங்கும்” - குடும்பம் குடும்பமாக வலம் வரும் காட்டு யானைகள்

பருவநிலை மாற்றம் காரணமாக, உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வருகின்றன.

கோவை,

“போவோமா ஊர்கோலம்... பூலோகம் எங்கெங்கும்” என்ற சின்னதம்பி படத்தில் வரும் பாடலுக்கு ஏற்றவாறு காட்டு யானைகள் குடும்பம் குடும்பமாக உலா வருகின்றன.

காட்டு யானைகள் உலா

கோவை மாவட்டத்தில் தடாகம் பள்ளத்தாக்கு மற்றும் மங்கரை வனப்பகுதி அமைந்துள்ளன. இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தங்கள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன.

இந்த காட்சிகள் அப்பகுதி மக்களிடையே வியப்பையும் அதே சமயம் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு வளையத்தில் குட்டிகள்

தற்போது இப்பகுதிகளில் நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வருகின்றன. அவ்வாறு இடம்பெயரும் போது, தாய் யானைகள் தங்களது குட்டிகளை நடுவில் வைத்து, சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து சாதூர்யமாக அழைத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

வனத்துறை எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதியில் யானைக் கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால் யானைகள் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே அதைத் தடுக்க வனத்துறையினர் 24 மணி நேர தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் யாரும் யானைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அருகில் செல்லவோ, புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கவோ கூடாது என வனத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.