தமிழக செய்திகள்

சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட்டில் குண்டு வெல்லம், சர்க்கரை விலை கடும் உயர்வு

சமீபகாலமாக சர்க்கரை விலை அதிகரித்து வருகிறது.

சேலம்,

குண்டு வெல்லம்

சேலம், செவ்வாய்ப் பேட்டை சந்தைக்கு, தினமும் சராசரியாக, 200 டன் உருண்டை வெல்லம் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. அங்கு கடந்த மாதம், 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை வெல்லம், 1,400 ரூபாய் வரை விற்ற நிலையில் படிப்படியாக விலை அதிகரித்தது. இரு வாரங்களுக்கு முன், 1,650 ரூபாயாக உயர்ந்தது.

தொடர்ந்து நேற்று நடந்த ஏலத்தில், 30 கிலோ மூட்டை, 1,900 முதல், 2,000 ரூபாய் வரை விலைபோனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளதால், வெல்ல தேவை அதிகரிக்கும் என எதிர்பார்த்து, போட்டி போட்டு பலரும் ஏலம் எடுத்தனர். சமீபகாலமாக சர்க்கரை விலை அதிகரித்து வருவதால், பல்வேறு உணவு, தின்பண்ட தயாரிப்பு நிறுவனங்கள், நாட்டு வெல்லத்தை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதுவும் சந்தையில் கூடுதல் தேவையை ஏற்படுத்தியுள்ளது.

சர்க்கரை விலை உயர்வு

இதேபோல், சேலம் மார்க்கெட்டில் சர்க்கரை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதாவது, 50 கிலோ எடை கொண்ட சர்க்கரை கடந்த வாரம் ரூ.2,130-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மூட்டைக்கு ரூ.1,200 அதிகரித்து ரூ.3,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை யாக கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் தற்போது ரூ.67-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் குண்டு வெல்லம் மற் றும் சர்க்கரையை மொத்தமாக வாங்கும் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கரும்பு விளைச்சல் குறைவு

இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை வியாபாரிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டிற்கு குண்டு வெல்லம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் சர்க்கரையை பொறுத்தவரையில் உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தான் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது சர்க்கரை தயாரிப்பு குறைந்துவிட்டதால் அதன் விலை அதிகரித்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் கரும்பு விளைச்சல் குறைந்துவிட்டதால் சர்க்கரை தயாரிக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி, அதன்பிறகு ஆயுதபூஜை, தீபாவளி என தொடர்ச்சியாக திருவிழா காலம் என்பதால் குண்டு வெல்லம், சர்க்கரை விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்காது, என்றனர்.