தமிழக செய்திகள்

சென்னை கிண்டி மருத்துவமனையில் அதிர்ச்சி: விபத்தில் மீட்கப்பட்ட வாலிபர் திடீர் உயிரிழப்பு

நுரையீரல் தொற்று காரணமாகவே தர்ஷன் உயிரிழந்து விட்டதாக தற்போது டாக்டர்கள் கூறுகிறார்கள்.

சென்னை,

கத்திப்பாரா மேம்பாலத்தில் பஸ் மோதி விபத்தில் மீட்கப்பட்ட வாலிபர் திடீர் உயிரிழப்பு. வேளச்சேரி டி.என்.எச்.பி. காலனியைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன். எலக்ட்ரீஷியன். இவரது மகன் தர்ஷன் (வயது 19). இவர், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தர்ஷன்

கடந்த 16-ந்தேதி அய்யனாரப்பன், தனது மகன் தர்ஷனுடன் மோட்டார் சைக்கிளில் அசோக்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது, கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு மின்சார பஸ், இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தந்தை-மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

மீட்பும் சிகிச்சையும்

விபத்து ஒன்றில் சிக்கிய தந்தை அய்யனாரப்பன் மற்றும் அவரது மகன் தர்ஷன் ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் தந்தை அய்யனாரப்பன் பூரண உடல்நலம் தேறினார். ஆனால், மகன் தர்ஷனுக்கு காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மருத்துவர்கள் தீவிர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

திடீர் மரணம்

அறுவை சிகிச்சை முடிந்து வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தர்ஷனுக்கு, கடந்த சனிக்கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று தர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர்கள் குற்றச்சாட்டு

தர்ஷனின் திடீர் மரணம் குறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, "அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது என்றுதான் கூறினார்கள். ஆனால் நுரையீரல் தொற்று காரணமாகவே தர்ஷன் உயிரிழந்து விட்டதாக தற்போது டாக்டர்கள் கூறுகிறார்கள்" என கண்ணீருடன் தெரிவித்தனர்.