தமிழக செய்திகள்

சித்ரா பவுர்ணமி தரிசனத்தில் அதிர்ச்சி - கண்ணகி கோவிலில் மின்னல் தாக்கி காவலர் உள்பட 10 பேர் காயம்

தேனி மாவட்டம் அருகே தமிழக - கேரள எல்லைப் பகுதியில் பிரசித்தி பெற்ற மங்களதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது.

தேனி,

சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி கண்ணகி கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் மீது மின்னல் தாக்கியதில், காவலர் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

தேனி மாவட்டம் அருகே தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மங்களதேவி கண்ணகி கோவிலில் இன்று சித்ரா பவுர்ணமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொக்கரக்கண்டம் மலைப்பாதை வழியாக கோவிலுக்குச் சென்றனர்.

அப்போது, திடீரென பலத்த இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட அதிர்வில், மலைப்பாதையில் நடந்து சென்ற பக்தர்கள் நிலைகுலைந்து கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் மொத்தம் 10 பேர் காயமடைந்தனர். இதில் கோவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. பெண் பக்தர் ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, காயமடைந்த 10 பேரும் உடனடியாக மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தேனி மற்றும் குமளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT