திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள தளவாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சசிகலா (32). இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சசிகலாவுக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருந்தது. இதனால்,இரண்டாவது குழந்தையையாவது சுகப்பிரசவத்தில் வீட்டிலேயே பெற்றெடுக்க வேண்டும் என தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக வீட்டிலிருந்தே சுகப்பிரசவம் பார்ப்பது தொடர்பாக யூடியூபில் பல வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் சசிகலாவிற்கு கடந்த 24-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது குடும்பத்தினர் அந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். அதன்படி தன் கணவர் கார்த்திக் மற்றும் மாமியார் சேர்ந்து சசிகலாவிற்கு பிரசவம் பார்க்க தொடங்கினர்.
அதில் இவர்கள் நினைத்தது போல சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் துரதிர்ஷ்டமாக சசிகலாவிற்கு பிரசவத்தின்போது அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. உடல்நிலை மிக மோசமடைந்தது. இதனால் சசிகலாவை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக சிகிச்சை அளித்தும் பலனின்றி சசிகலா இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊத்துக்குளி காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மனைவியின் உயிரிழப்புக்கு காரணமான கணவர் கார்த்திக் மற்றும் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.