கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்.குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மது பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடந்ததால் பொதுமக்கள் போலீசில் கோரிக்கை வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்.குண்ணத்தூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலையில் பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் வந்தனர். அப்போது பள்ளி வளாகத்திலும் வகுப்பறைக்கு அருகிலும் மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சமூக விரோதிகளின் இந்த செயலால் பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்
மேலும், பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மது அருந்திய மர்ம நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிக்கு இரவு நேர போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.