தமிழக செய்திகள்

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பமானதால் அதிர்ச்சி; டாக்டர்களிடம் உறவினர்கள் வாக்குவாதம்

டிஸ்சார்ஜ் ஆவணத்தில், சத்தியபிரியாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளதாக குறிப்பிட்டு அனுப்பி வைத்தனர்.

ஈரோடு,

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பம் அடைந்ததால் அவருடைய உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடும்ப கட்டுப்பாடு

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சத்தியபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு, சத்தியபிரியாவுக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 2-வது குழந்தை பிறந்தது. அப்போது குடும்ப கட்டுப்பாடு செய்து விடும்படி சத்தியபிரியா கூறி உள்ளார். இதையடுத்து குடும்ப கட்டுப்பாடு செய்ய கணவன், மனைவியிடம் கையெழுத்து பெற்று, ஒப்புதல் வழங்கினர். குழந்தை பிறப்பு மருத்துவ குறிப்பு டிஸ்சார்ஜ் ஆவணத்தில், சத்தியபிரியாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளதாக குறிப்பிட்டு அனுப்பி வைத்தனர்.

மீண்டும் கர்ப்பம்

ஆனால் மீண்டும் சத்தியபிரியா கர்ப்பமானதால், அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த சுரேஷ், சத்தியபிரியா தம்பதியினர் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தை மற்றும் மகப்பேறு பிரிவு டாக்டர்கள், சத்தியபிரியாவை அழைத்து சென்று பரிசோதனை செய்து அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து, தொடர் சிகிச்சை. பரிசோதனைக்கு பரிந்துரைத்தனர்.

வாக்குவாதம்

இதற்கிடையில், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆவணங்களை எடுத்து வந்த டாக்டர்கள் அங்குள்ள ஆவணத்தில், சத்தியபிரியாவுக்கு 2-வது குழந்தை பிறந்தபோது அவருடைய உடல் நிலை மோசமாக இருந்ததால், அப்போது அவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யவில்லை. என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சத்தியபிரியாவுக்கு வழங்கிய 'டிஸ்சார்ஜ் குறிப்பில்' குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தவறாக குறிப்பிட்டு விட்டனர் என தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது குடும்பத்தினர். டாக்டர்களிடம் வெகுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.