குளச்சல்,
குளச்சல் அருகே வீடு புகுந்து கத்தியால் குத்தி மீனவர் கொல்லப்பட்டார். அவருடைய மனைவியின் தங்கை கணவர் இந்த வெறிச்செயலை அரங்கேற்றினார்.
குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 51), மீன்பிடி தொழிலாளி. இவருடைய மனைவி ஜாஸ்மின் லலிதா (46). இவர்களுக்கு திருமணமாகி 24 வருடங்கள் ஆகிறது. 3 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் ராஜன், ஜாஸ்மின் லலிதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கோபித்துக் கொண்டு குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் உள்ள தனது சகோதரி மேரிகலா (53) வீட்டுக்கு சென்று தங்கினார். மேரிகலாவின் கணவர் புஷ்பநாதன் (58), மீனவர்.
இதனை தொடர்ந்து 2 வாரங்களுக்கு முன்பு ராஜன், கொட்டில்பாடுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்தார். இதனை தொடர்ந்து தங்கைக்கு ஆதரவாக மேரிகலா பேசியுள்ளார். இதனால் அவருக்கும், ராஜனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த பிரச்சினையில் புஷ்பநாதன் தலையிட்டார். அப்போது ராஜனையும், மேரிகலாவையும் அவர் சமாதானம் செய்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு ராஜன் அங்கிருந்து கோபத்துடன் சென்றார். ஒரு கட்டத்தில் மனைவி தன்னுடன் வராததற்கு, மேரிகலாவும், புஷ்பநாதனும் தான் காரணம் என எண்ணினார். இது அவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் ஜாஸ்மின் லலிதா வெளியூரில் நர்சிங் படிக்கும் தனது மகளை அழைத்து வருவதற்காக நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் வந்தார். அவருக்கு துணையாக சகோதரி மேரிகலாவும் சென்றார். இதனால் புஷ்பநாதன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இரவான நிலையில் ராஜன் அங்கு சென்றுள்ளார். தனது மனைவி எங்கே? என புஷ்பநாதனிடம் கேட்டார். அதற்கு அவர் உரிய காரணத்தை கூற, ராஜன் ஆவேசமாக திட்டியுள்ளார். பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜன், எல்லா பிரச்சினைக்கும் நீதான் காரணம் என கூறி திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துள்ளார். பிறகு கழுத்து, மார்பு பகுதியில் குத்தினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத புஷ்பநாதன் கத்திக்குத்து காயங்களுடன் அலறினார். பின்னர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி வீதிக்கு வந்தார். எனினும் விடாமல் துரத்திய ராஜன் அவரை சரமாரியாக குத்தினார்.
இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே ராஜன் அங்கிருந்து தப்பி ஓடினார். பிறகு வீதியில் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார், கொல்லப்பட்ட புஷ்பநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராஜனை கைது செய்தனர். மீனவரை, மனைவியின் தங்கை கணவர் குத்திக் கொன்ற சம்பவம் குளச்சல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.