சென்னை,
சென்னையில் 4-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை அவர் படித்த பள்ளியிலேயே காவலாளியாக பணிபுரிந்த தந்தை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகளை கொன்றுவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற காவலாளி கயிறு அறுந்ததில் உயிர் தப்பி இருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரும் இன்று உயிரிழந்தது குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் அரசு பள்ளியில் நேபாளத்தை சேர்ந்த லட்சுமணன் பிரசாத் என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். அவருடன் மனைவி மற்றும் 2 மகள்களும் தங்கி இருந்தனர். மூத்த மகள் கீதா 4-வது வகுப்பும், இளையமகள் 1-வது வகுப்பும் படித்து வந்தனர். பள்ளிக்கூட வளாகத்திலேயே 4 பேரும் தங்கி இருந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மனைவி மீது சந்தேகப்பட்டு லட்சுமணன் பிரசாத் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 6-ம் தேதியும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன் பிரசாத்தின் மனைவி இளைய மகளை அழைத்துக் கொண்டு பள்ளியில் இருந்து வெளியேறி உள்ளார். கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக நுங்கம்பாக்கத்திற்கு சென்று தங்கினார்.
மகள்கள் இருவரையும் மனைவி தன்னுடன் அழைத்து செல்ல முற்பட்டபோது லட்சுமணன் பிரசாத் தடுத்து நிறுத்தியுள்ளார். முதல் மகளை தன்னுடன் விட்டுவிட்டு செல்லுமாறு அவர் கூறி இருக்கிறார். இதைத்தொடர்ந்து மூத்த மகள் கீதாவை கணவருடன் விட்டுவிட்டு, இளைய மகளை மட்டும் மனைவி அழைத்துச் சென்றிருக்கிறார்.
மனைவி 2-வது மகளுடன் பிரிந்து சென்றதால் லட்சுமணன் பிரசாத் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாகவே நேற்று இரவு அவர் தனது மூத்த மகள் கீதாவை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொன்று தூக்கில் தொங்கவிட்டுள்ளார். பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது கயிறு அறுந்து கீழே விழுந்ததால் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணையில் காவலாளி லட்சுமணன் பிரசாத் மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதை வீடியோ கால் மூலமாக மனைவிக்கு காண்பித்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. லட்சுமணன் பிரசாத் வீடியோகாலில் பேசியபோது இளையமகள் தான் தனது அக்காவின் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டு தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் தன் தாயிடம் அதுபற்றி கூறியுள்ளார். இதன் பிறகே லட்சுமணன் பிரசாத்தின் மனைவி அலறி அடித்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றுள்ளார். இதற்கிடையே பள்ளியில் பணியாற்றி வரும் வாணி என்ற பெண்ணும் மாடிக்கு சென்றபோது மாணவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதன் பிறகே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அரசு மருத்துவமனையில் மாணவி மற்றும் அவரது தந்தையான காவலாளியின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மனைவியிடம் ஒப்படைக்கப்படுகிறது. இருவரது உடலையும் பார்த்து அவரும், இளைய மகளும் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கொலை சம்பவம் அங்கு படித்து வரும் மாணவிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.