மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஜாமீனில் வெளியே வந்த ரவுடி மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (23). இவர் வேலூர் கிராமத்தில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த விக்னேஷ், தனது நண்பர் முனீஸ்வரனுடன் இருந்துள்ளார்.
இந்த நிலையில், வேலூர் கிராமத்தில் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் முனீஸ்வரன் ஆகியோரை மர்ம கும்பல் திடீரென வழிமறித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டித் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
இந்த கொடூர தாக்குதலில் விக்னேஷ் பலத்த வெட்டுக்காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் முனீஸ்வரன் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த முனீஸ்வரனை மீட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, விக்னேஷின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம கும்பலை அடையாளம் காணவும், அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விக்னேஷ் 3-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மானாமதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.