தமிழக செய்திகள்

சேலம் அருகே அதிர்ச்சி சம்பவம்; 17 வயது மாணவி 7 மாத கர்ப்பம்! - வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஆசை வார்த்தைகள் கூறி அதிரூபன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம்,

ஓமலூர் அருகே 17 வயது கல்லூரி மாணவி 7 மாத கர்ப்பமான சம்பவம் தொடர்பாக, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 30 வயது வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கல்லூரியில் ஏற்பட்ட வயிற்று வலி

ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதுகுறித்து கல்லூரி பேராசிரியர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து கல்லூரிக்கு வந்த பெற்றோர், மாணவியை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மபுரி மாவட்டம் பாகல்பட்டியை சேர்ந்த அதிரூபன் (30) என்பவருக்கும், மாணவிக்கும் கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்தது தெரியவந்தது.

இந்த பழக்கத்தை பயன்படுத்தி ஆசை வார்த்தைகள் கூறி அதிரூபன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

வழக்கு அரூர் போலீசாருக்கு மாற்றம்

சம்பவம் நடந்த இடம் பொம்மிடி என தெரியவந்ததை தொடர்ந்து, இந்த வழக்கு அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அதிரூபனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT