தமிழக செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே அதிர்ச்சி: கிரைண்டர் செயலி மூலம் இளைஞருக்கு கத்திக்குத்து

இளைஞரை தனிமையில் வரவழைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

கிரைண்டர் செயலி மூலம் இளைஞரை தனிமையான இடத்திற்கு வரவழைத்து கத்தியால் குத்தி பணம் பறித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மர்ம நபர்களால் கத்திக்குத்து

விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பச்சைமுத்து (வயது 30). இவர் கிரைண்டர் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். இதில் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள டோல்கேட் அருகே வரும்படி கூறியுள்ளனர். இவரும் அவர்களை நம்பி சென்றுள்ளார்.

பின்னர், அவரை மதியனூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை கத்தியால் குத்திய மர்ம நபர்கள், அவரிடம் இருந்த ரூ.4,000-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பச்சைமுத்துவை அப்பகுதி மக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றவாளிகள் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர் பேட்டை போலீசார், பச்சைமுத்துவின் செல்போனில் இருந்த குறுஞ்செய்திகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT