தமிழக செய்திகள்

ஒருபக்கம் காதலன், மறுபக்கம் திருமணமானவருடன் பழக்கம்; பெண் போலீஸ் தற்கொலையில் திடுக்கிடும் தகவல்

ரஞ்சனி, மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

திருப்பூர்,

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனி (வயது 24). இவர் கடந்த 2022-ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த அவர், காங்கேயம் சாலையில் உள்ள நல்லூர் போலீஸ் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

தற்கொலை

நேற்று காலை நீண்ட நேரமாக அவரது அறை தறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால் சந்தேக மடைந்த சக போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ரஞ்சனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரஞ்சனியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு ப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண் போலீஸ் ஒருவருடன் பழக்கம்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரஞ்சனிக்கு மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் ஆண் போலீஸ் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், இவர்களது காதல் தொடர்பு குறித்து இரு தரப்பு குடும்பத்தினருக்கும் தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏதேனும் ஏற்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போனுக்கு 3 அழைப்புகளிலும் வேறு வெவேறு நபர்கள்

தற்கொலைக்கான உண்மை காரணத்தை அறிய, உயிரிழந்த ரஞ்சனியின் செல்போனை பறிமுதல் செய்த நல்லூர் போலீசார், அதில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ரஞ்சனி இறப்பதற்கு முன்பு கடைசியாக எந்தெந்த எண்களில் இருந்து போன் வந்துள்ளது. எங்கிருந்து பேசி இருக்கிறார்கள் மற்றும் எவ்வளவு நேரம் பேசியுள்ளார் என்ற அழைப்பு விவரங்களை சேகரித்தனர். அதில், பெண் போலீஸ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவரது போனுக்கு 3 அழைப்புகள் வந்துள்ளதும், அந்த 3 அழைப்புகளிலும் வேறு வேறு நபர்களிடம் அவர் பேசியிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த செல்போன் எண்களை வைத்து ஆய்வு செய்த நல்லூர் போலீசார், ரஞ்சனியிடம் கடைசியாகப் பேசிய 3 போலீசாரை

கண்டறிந்து, அவர்களை உடனடியாக நல்லூர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.

திருமணத்திற்கு சம்மதம்

ரஞ்சனியும் திருவண்ணாமலையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவர்க ளது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, இரு வீட்டாரும் பேசி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்துள்ளன. இந்த நிலையில் திருப்பூரில் பணியாற்றி வரும் திருமணமான போலீஸ்காரர் ஒருவருடன் ரஞ்சினிக்கு பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. மேலும் செல்போனில் இருவரும் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் ரஞ்சனியின் காதலனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த காதலன் ரஞ்சனியுடன் பேசி வந்த அந்த திருமணமான போலீஸ்காரரை நேரில் சென்று மிரட்டியுள்ளார். "எங்களுக்குத் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இனி ரஞ்சனியுடன் பேசுவதையும் தொடர்புகொள்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

காதலனுடன் சண்டை

இதன் தொடர்ச்சியாக, ரஞ்சனிக்கும் அவரது காதலனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் ரஞ்சனி தனது காதலனுடன் செல்போனில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு காதலனுடன் போனில் சண்டைபோட்டபடியே வீட்டிற்குள் சென்ற ரஞ்சனி,மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.