தமிழக செய்திகள்

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை; நவம்பர் 1-ந்தேதிக்குள் மாற்ற வேண்டும் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

மும்பையை சேர்ந்த இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை,

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருக்கக்கூடிய கடைகளுக்கு தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்று கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பெயர் பலகைகளில் தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம் என்றும், பெயரை மாற்றத் தவறினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையை சேர்ந்த இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கே.சுரேந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி கடைசி வாய்ப்பாக நவம்பர் 1-ந்தேதிக்குள் கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் எனவும் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார்.

SCROLL FOR NEXT