தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சியின் 5 ஆண்டு சாதனைகளை விளக்கும் குறும்படம் - மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

5 ஆண்டுகள் (2021-2026) சாதனைகளை விளக்கும் குறும்படம் எல்இடி திரையில் திரையிடுவதை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.3.2026) சென்னை, மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 ஆண்டுகள் (2021-2026) சாதனைகளை விளக்கும் குறும்படம் எல்இடி திரையில் திரையிடுவதை நேரில் பார்வையிட்டார். இந்த குறும்படத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் குறும்படமாக ஒளிபரப்பப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 ஆண்டு சாதனைகள்

கட்டி முடிக்கப்பட்ட பாலங்கள் பற்றிய விவரங்கள்

சென்னை மாநகரில் சீரான போக்குவரத்திற்கு கட்டப்பட்டுள்ள கொளத்தூர் வில்லிவாக்கம் எல்.சி.1 ரெயில்வே சந்திக்கடவில் மேயர் சிட்டிபாபு பாலம், மாம்பலம் ரெயில் நிலையம் முதல் தியாகராயநகர் பேருந்து நிலையம் வரை ஆகாய நடைமேம்பாலம், ஸ்டீபன்சன் சாலையில் செங்கை சிவம் பாலம், ஓட்டேரி நல்லாவின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் பகுதியில் பாலம், புழல் உபரிநீர் கால்வாயின் குறுக்கே ஆமுல்லவாயல், பர்மா நகர் மற்றும் வடப்பெரும்பாக்கம் ஆகியவற்றில் 3 பாலங்கள், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையின் குறுக்கே நடைமேம்பாலம், கூவம் ஆற்றின் குறுக்கே அருணாச்சலம் சாலையில் பாலம், கொடுங்கையூர் கால்வாயின் குறுக்கே பெட்டக வடிவப் பாலம், யானைக்கவுனி மேம்பாலம், ஆதம்பாக்கம் ஏரியின் குறுக்கே ஜீவன் நகர் 2வது தெருவில் பாலம், கூவம் ஆற்றின் குறுக்கே சன்னதி முதல் குறுக்கு தெருவில் உயர்மட்ட பாலம், தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் சாலையில் உயர்மட்ட பாலம், போஜராஜாநகர் – ரெயில்வே சந்திக்கடவின் குறுக்கே வாகனச் சுரங்கப்பாதை, விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே ரெயில்வே காலனி 3ஆவது தெருவையும், மாதா கோயில் தெருவையும் இணைக்கும் வகையில் பாலம், கொருக்குப்பேட்டை, மணலி சாலையில் ரெயில்வே 2பி சந்திக்கடவில் பாலம், டாக்டர் டிஜிஎஸ் தினகரன் சாலையின் குறுக்கே மூன்று கண் பெட்டக வடிவப் பாலம், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் கூவம் ஆற்றின் குறுக்கே சின்ன நொளம்பூரில் பாலம், என மொத்தம் 725.82 கோடி ரூபாய் செலவில் 19 புதிய பாலங்கள் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டில் உள்ளது குறித்து விளக்கும் குறும்படம் திரையிடப்படுகிறது.

புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பாலங்கள் பற்றிய விவரங்கள்

மேலும், சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில், கணேசபுரம் சுரங்கப்பாதையில் உயர்மட்டப்பாலம், அம்பத்தூர் ரெயில்வே சந்திக்கடவு எண்-6ன் குறுக்கே இருசக்கர வாகனம் மற்றும் பாதசாரிகள் சுரங்கப்பாதை, சூளைமேடு, இந்திரா காந்தி 2வது தெருவில் விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே புதிய பாலம், சூளைமேடு, கண்ணகி தெருவில் விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே புதிய பாலம், சூளைமேடு, விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே தமிழர் வீதியில் புதிய பாலம், கொடுங்கையூர் கால்வாயின் குறுக்கே உள்ள தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் கடும்பாடி அம்மன் கோயில் தெருவை இணைக்கும் புதிய பாலம், பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே கிழக்கு கடற்கரை சாலை (ம) பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் வெங்கடேசபுரம் – இளங்கோ நகர் பகுதியில் புதிய பாலம், பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே கிழக்கு கடற்கரை

சாலை (ம) பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் காமராஜர் சாலை – வீரமணி சாலை, பாலவாக்கம் பகுதியில் புதிய பாலம்;

பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே கிழக்கு கடற்கரை சாலை (ம) பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் பாண்டியன் தெரு – அண்ணா நகர், துரைப்பாக்கம் பகுதியில் புதிய பாலம், விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே திருக்குமரபுரத்தில் புதிய பாலம், விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே கோ.சு.மணி சாலையில் புதிய பாலம், விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே காமராஜர் நகர் 3வது தெருவில் புதிய பாலம், ஓட்டேரி கால்வாயின் குறுக்கே நியூ பெரான்ஸ் சாலையில் பாலம், ஐ.ஓ.சி.எல் முனையம் அருகே தண்டையார்பேட்டையில் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை, பரமேஸ்வரன் நகரில் 2 கண் கொண்ட பெட்டக வடிவப் பாலம், அடையாறு மண்டலம், வார்டு-172க்குட்பட்ட சர்தார் பட்டேல் சாலை-வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பிலிருந்து குருநானக் கல்லூரி-200 அடி சாலை சந்திப்பு வரை புதிய மேம்பாலம், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-38க்குட்பட்ட எண்ணூர் நெடுஞ்சாலையில் சந்திக்கடவு எண்-2ஏக்கு மாற்றாக புதிய மேம்பாலம், என மொத்தம் 686.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 17 புதிய பாலங்கள் கட்டும் பணிகள் குறித்த குறும்படமும் திரையிடப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் இதர பணிகள் பற்றிய விவரங்கள்

பட்டினப்பாக்கம்-சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் சாலை மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.17.61 கோடி மதிப்பில் நவீன மீன் அங்காடிகள், ரூ.2,359.73 கோடி மதிப்பீட்டில் 3,455.44 கி.மீ. நீளத்திற்கு 19,849 பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள், ரூ.6,495 கோடி மதிப்பீட்டில் 1422.28 கி.மீ. நீளத்திற்கு புதியதாக மழைநீர் வடிகால் பணிகள், ரூ.91.04 கோடி மதிப்பில் 60 நீர்நிலைகளில் புனரமைப்புப் பணிகள், 296 கோடி ரூபாய் மதிப்பில் 37 நீர்வழிக்கால்வாய்களில் வெள்ளத் தடுப்புச் சுவர், ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் ரிப்பன் மாளிகையை மாறுபடும் வண்ண விளக்குகளால் (RGB Dynamic lighting) ஒளிரூட்டும் பணி, ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கம், ரூ.6 கோடி மதிப்பீட்டில் மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை (Blue Flag Beach), மெரினா கடற்கரை (கட்டம் 2), திருவான்மியூர், உத்தண்டி, பாலவாக்கம் ஆகிய 4 இடங்களில் ரூ.25.20 கோடி மதிப்பீட்டில் நீலக் கொடி கடற்கரை (Blue Flag Beach) திட்டத்தை செயல்படுத்துதல் குறித்தும்;

ரூ.68.99 கோடி மதிப்பீட்டில் 13,579 புதிய தெரு விளக்கு கம்பங்கள் மற்றும் 12,213 எல்.இ.டி. தெரு விளக்குகள், ரூ.194.42 கோடி மதிப்பீட்டில் 90 புதிய பள்ளிக் கட்டடங்கள், ரூ.124.30 கோடி மதிப்பீட்டில் மின்மாற்றி அமைந்துள்ள 3,948 இடங்களில் பாதுகாப்பு கட்டமைப்பு (View Cutters) அமைக்கும் பணி, 8 மண்டலங்களில் ரூ.37.70 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம், ரூ.72 கோடி மதிப்பீட்டில் 28 சென்னைப் பள்ளிகளில் மறுசீரமைப்புப் பணி, ரூ. 2.86 கோடி மதிப்பீட்டில் 13 நூலகக் கட்டடங்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1471.60 கோடி மதிப்பீட்டில் 99 பணிகள், ரூ.19.81 கோடி மதிப்பீட்டில் காதர் நவாஸ்கான் சாலையில் நடைபாதை வளாகம், சிங்கார சென்னை திட்டத்தின் கீழ், ரூ.90.09 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட 236 பூங்காக்கள், 30 பூங்காக்களில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய நீர் உறிஞ்சும் பூங்கா, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாதவரம் ஏரியில் ரூ.15.03 கோடி மதிப்பீட்டிலும், திருவொற்றியூர் மண்டலம், அன்னை சிவகாமி நகரில் ரூபாய் 4.62 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் அம்பத்தூர் மண்டலம் தாங்கல் ஏரி

பூங்காவில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும் படகு குழாம்கள் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும்;

பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் ஒருங்கிணைப்புப் பணிக்காக வடக்கு, மத்திய, தெற்கு மண்டலங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ரூபாய் 57.76 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி மாளிகையில் சீர்மிகு ஆளுமைக் கட்டடம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC), ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் பல்நோக்கு ஒருங்கிணைந்த பிராட்வே போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டுமானப்பணி, ரூ.75 கோடி மதிப்பீட்டில் ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மன்றக் கூடம் (Council Hall) கட்டுமானப்பணி, ரூ.58.37 கோடி மதிப்பீட்டில் கடப்பாக்கம் ஏரி புனரமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் குறும்படம் திரையிடப்படுகிறது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், 356 சென்னைப் பள்ளிகளில் 65,013 மாணவர்களும், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் மூலம், 575 சென்னைப் பள்ளிகளில் பயிலும் 67,625 மாணவர்களும் பயன்பெற்று வருவது குறித்தும், முதல்-அமைச்சரின் உணவுத் திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 21,951 தூய்மைப் பணியாளர்கள் பயன்பெறுவது குறித்தும், முதல்வரின் முகவரி துறையின் மூலம் பெறப்பட்ட 1,15,303 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது குறித்தும், தலா ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய 2 மண்டலங்களில் இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடங்கள் (Gig Workers Lounge) அமைக்கப்பட்டது குறித்தும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.10,000/- ஊக்கத்தொகை, 12ஆம் வகுப்பு பயின்ற 353 மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு ரூ.82.82 இலட்சம் ஊக்கத்தொகை, ரூபாய் 7.50 கோடி மதிப்பில் மகளிருக்கு சுய வேலை வாய்ப்பிற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் குறும்படம் திரையிடப்படுகிறது.

இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, துணை மேயர் மு.மகேஷ்குமார், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் வீ.ப.ஜெயசீலன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் திரு.நே.சிற்றரசு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்த வீடியோவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.