தமிழக செய்திகள்

போர் பதற்றத்தால் பற்றாக்குறை: வீட்டில் கியாஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்தலாமே!

"வரும்முன் காப்போம்" என்பதற்கு இணங்க, நாம் இப்போதே எரிபொருளை, சிக்கனமாக பயன்படுத்துவோம்.

சென்னை,

"தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்" என்று தமிழ்நாட்டில் ஒரு பழமொழியை சொல்வார்கள். இந்த பழமொழியை படித்தவுடன், "அது எப்படி?" என்ற கேள்வி எழும். அதாவது, ஒரு தவறுக்கு காரணமானவர் ஒருவராக இருக்க, பழி அல்லது தண்டனை வேறொருவர் மீது சுமத்தப்படுவதைத்தான் இந்த பழமொழி குறிக்கிறது.

அதுபோலத்தான், மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் நமது நாட்டுக்கு வருவதில் தடை ஏற்பட்டுள்ளதால், இந்த அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளில் அதிக மக்கள்தொகையை (சுமார் 140 கோடி) கொண்ட நாடு இந்தியா என்ற அடிப்படையில், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

தற்போது, கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, "வரும்முன் காப்போம்" என்பதற்கு இணங்க, நாம் இப்போதே எரிபொருளை, குறிப்பாக கியாஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.

அதற்கான சில டிப்ஸ்களை தொடர்ந்து பார்ப்போம்.

* வீட்டில் தண்ணீர் கொதிக்க வைக்க அல்லது பால் காய்ச்ச மின்சார அடுப்பை பயன்படுத்தலாம்.

* குடிப்பதற்கு தேவையான வெந்நீரை ஒரே முறை சூடுபடுத்தி பிளாஸ்க்கில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அடுப்பை பற்ற வைப்பதை தவிர்க்கலாம்.

* அடுப்பைப் பற்ற வைப்பதற்கு முன்பே காய்கறிகளை நறுக்குவது, மசாலாக்களைத் தயார் செய்வது என அனைத்தையும் முடித்துவிட வேண்டும். அடுப்பை எரியவிட்டுவிட்டு காய்கறி நறுக்குவது கியாஸ் செலவை அதிகரிக்கும்.

பிரஷர் குக்கரில் சமைக்கவும்

* பிரிட்ஜில் இருந்து எடுக்கும் பொருட்களை நேரடியாக அடுப்பில் வைக்க வேண்டாம். அவை வெப்ப சமநிலைக்கு வந்த பிறகு சூடுபடுத்தினால் குறைந்த அளவே கியாஸ் செலவாகும்.

* முடிந்தவரை பெரும்பாலான உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கவும். இது சாதாரண பாத்திரங்களை விட 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கியாசை மிச்சப்படுத்தும்.

* பர்னரின் அளவை விட பெரிய பாத்திரங்களை பயன்படுத்துங்கள். சுடர் பாத்திரத்தின் ஓரங்களைத் தாண்டி வெளியே வந்தால் வெப்பம் வீணாகிறது என்று அர்த்தம்.

* எப்போதும் பாத்திரங்களை மூடிவைத்து சமைக்கவும். இதனால் ஆவி வெளியேறாமல் உணவு விரைவாக வேகும்.

அதிக அளவு கேஸ் வீணாவதை தடுக்க வேண்டும்

* உங்கள் அடுப்பின் பர்னர் நீல நிறச் சுடருடன் எரிகிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள். மஞ்சள் நிறத்தில் எரிந்தால் பர்னரில் அடைப்பு உள்ளது என்று அர்த்தம். இது அதிக அளவு கியாசை உறிஞ்சும்.

* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயைக் குறைத்துவிடுங்கள். அதிக தீயில் வைப்பதால் உணவு சீக்கிரம் வேகாது, மாறாக தண்ணீர் மட்டுமே ஆவியாகும்.

* அரிசி மற்றும் பருப்பு வகைகளைச் சமைப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே ஊற வைத்தால், அவை மிக விரைவாக வெந்துவிடும்.

* சமைக்கும்போது அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்ற வேண்டாம். அதிக தண்ணீரைச் சுண்ட வைக்க அதிக நேரம் அடுப்பு எரிய வேண்டியிருக்கும்.

* குடும்பத்தினர் அனைவரும் ஒரே நேரத்தில் உணவருந்துவது சிறந்தது. தனித்தனியாக சாப்பிடும்போது ஒவ்வொரு முறை உணவை சூடுபடுத்துவதால் அதிக கியாஸ் வீணாகிறது.

* அடுப்பில் வைக்கும் பாத்திரத்தின் வெளிப்பகுதி ஈரமில்லாமல் துடைத்துவிட்டு வைக்கவும். ஈரப்பதம் இருந்தால், அதை உலர்த்தவே சிறிய அளவு கியாஸ் வீணாகும்.

* சமைத்து முடித்தவுடன் மறக்காமல் ரெகுலேட்டரை அணைத்து விடுங்கள். இது மிகச்சிறிய அளவிலான கியாஸ் கசிவை தடுப்பதுடன் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

* முட்டை வேகவைக்கவோ அல்லது காய்கறிகளை ஆவியில் வேகவைக்கவோ பாத்திரம் நிறையத் தண்ணீர் ஊற்ற வேண்டாம். காய் மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் இருந்தால் போதும்.

மின்சார அடுப்பு

* குக்கரில் சாதம் வைக்கும்போதே, அதனுள்ளேயே ஒரு சிறிய பாத்திரத்தில் பருப்பு அல்லது காய்கறிகளையும் வைத்து ஒரே விசிலில் அனைத்தையும் வேகவைக்கலாம்.

* காய்கறிகள் முக்கால்வாசி வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மூடி வைத்துவிடுங்கள். அந்தப் பாத்திரத்தில் இருக்கும் வெப்பத்திலேயே மீதி கால்வாசி வெந்துவிடும். இது தினமும் 5-10 நிமிட கியாஸ் பயன்பாட்டை மிச்சப்படுத்தும்.

* டீ, காபி அல்லது குடிதண்ணீர் சூடுபடுத்த கியாஸ் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு மின்சார அடுப்பை பயன்படுத்துங்கள்.

* ஒரு கப் சுடுதண்ணீர் தேவைப்பட்டால் கூட கியாஸ் அடுப்பை தேடாமல் 'கெட்டில்'-ஐ பயன்படுத்துங்கள். இது கியாசை விட வேகமானது.