சென்னை,
பள்ளி பாடப்புத்தகங்கள் வினியோகத்தில் குறைபாடு ஏற்பட்டிருப்பதாக எழுந்த புகாருக்கு, பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-நடப்பு கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடுவதிலோ அல்லது அதன் முதற்கட்ட வினியோகத்திலோ எந்தவித தாமதமும் ஏற்படவில்லை. பள்ளிகளால் வழங்கப்பட்ட மாணவர்களின் ஆரம்பக்கட்ட எண்ணிக்கையின் அடிப்படையில், அனைத்துப் பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டு, கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே முழுமையாக வினியோகிக்கப்பட்டு விட்டன.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு வகுப்புகளிலும் பள்ளிகளிலும் கணிசமான எண்ணிக்கையில் புதிய சேர்க்கைகள் நடைபெற்றன. இந்த கூடுதல் சேர்க்கைகளை ஒருங்கிணைத்து, தொடக்கக் கல்வி இயக்குனர் சமர்ப்பித்த திருத்தப்பட்ட தேவைகளின் அடிப்படையில், தோராயமாக 80,000 கூடுதல் பாடப்புத்தகங்களுக்கான தேவை கண்டறியப்பட்டது. இந்தக் கூடுதல் எண்ணிக்கையிலான புத்தகங்களை அச்சிட்டு வினியோகிக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை உடனடியாக மேற்கொண்டது. தற்போது இந்த வினியோகம் நிறைவடைந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பும் பணி இறுதி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.