தமிழக செய்திகள்

தமிழக அரசு பஸ்களில் டயர் தட்டுப்பாடு - 1,500 பஸ்களை இயக்குவதில் சிக்கல்

டயர் தட்டுப்பாடு ஏற்பட்டு, தமிழகம் முழுவதும் சுமார் 1,500 பஸ்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் டயர் தட்டுப்பாடு காரணமாக, மாநிலம் முழுவதும் சுமார் 1,500 பஸ்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகளுக்கான பஸ் போக்குவரத்தை சீராக இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

20 ஆயிரம் பஸ்கள் இயக்கம்

தமிழகத்தில் சென்னை உள்பட 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் சார்பில் தினமும் சுமார் 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் பழமையானவை என கூறப்படுகிறது.

பழைய பஸ்களில் அடிச்சட்டம், இருக்கைகள், ஜன்னல்கள், மேற்கூரை உள்ளிட்ட பல்வேறு பாகங்களை அவ்வப்போது சீரமைக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், போதிய உதிரி பாகங்கள் கிடைக்காததுடன், பணியாளர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பதால் பராமரிப்புப் பணிகளில் சிரமம் நீடிக்கிறது.

டயர் பற்றாக்குறையால் பாதிப்பு

இந்த நிலையில், போக்குவரத்துக் கழக பணிமனைகளில் டயர் தட்டுப்பாடு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் தேவையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பல பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார் கூறுகையில், புதிய டயர்கள் கொள்முதல் செய்வதற்காக விடப்பட்டிருந்த டெண்டர், தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு புதிய டெண்டர் வெளியிடப்படவில்லை. இதனால் டயர் தட்டுப்பாடு ஏற்பட்டு, தமிழகம் முழுவதும் சுமார் 1,500 பஸ்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

டயர்கள் வாங்க நடவடிக்கை

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், ஒரு சில பணிமனைகளில் மட்டுமே டயர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தேவையான அளவு டயர்களைக் கொள்முதல் செய்வதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்றனர். டயர் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்ட பஸ்களின் சேவை எப்போது முழுமையாக சீரடையும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT