தூத்துக்குடி,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 40 பள்ளி மாணவர்கள் உணவின்றி தவித்து, அவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக வெளியாகிய செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் பசியின்றி படிக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்படும் மக்கள் நலத்திட்டங்களை கூட சரியாக செயல்படுத்தத் தெரியாத ஒரு திறமையற்ற அரசாக ஜோசப் விஜய் அவர்களின் அரசு செயல்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது என்று அதிகாரிகள் கூறும் விசித்திரமான விளக்கம் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்ப உணவின் அளவையும் அதிகரிக்க திட்டமிடாதது அரசு நிர்வாகத்தின் தவறே ஆகும்.
எனவே, தமிழக முதல்-அமைச்சர் விஜய், விளாத்திகுளம் பள்ளி சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தமிழகத்தில் எந்தவொரு அரசுப் பள்ளியிலும் இது போன்ற அவலநிலை ஏற்பட கூடாது என ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.