மதுரை,
லஞ்சம் கொடுத்து தான் அரசு வக்கீலாக வேண் டுமா? இவர்களெல்லாம் சட்டத்தைக் காப்பார்களா என
அரசு வக்கீல் நியமன வழக்கில் மதுரை ஐகோர்ட்டு சரமாறியாக கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இந்த வழக்கை லஞ்சஒழிப்புத்துறை விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெகன்ராஜ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த பிறகு தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விசாரணை நீதி மன்றங்களுக்கு சட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விசாரணை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு பல லட்சங்கள் பணம் லஞ்சம் பெறப்பட்டு உள்ளது.
உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட பொறுப்பில் இருந்த அனீஸ் என்பவர் ஒரு பெண் வழக்கறிஞரிடம் பணம் கேட்டு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் உள்ளது. அதில் ஒரு வழக்கறிஞர் நியமனத்திற்கு ரூ.15 லட்சம் வேண்டுமென்றும் பெண் வழக்கறிஞர் என்பதால் 2 லட்ச ரூபாய் குறைத்து கொடுத்தால் போதும் என அனீஸ் அந்த பெண் வழக்கறிஞரிடம் பேரம் பேசுகிறார்.
இதை அந்த பெண் வழக்கறிஞர் வீடியோவாக பதிவு செய்து பதிவேற்றம் செய்து உள்ளார். இதே போல் வழக்கறிஞர் அகஸ்டின் என்பவரிடமும் பேரம் பேசியதாக அந்த ஆடியோவில் உள்ளது அவர் தற்போது அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியவுடன் தமிழக வெற்றிக்கழகத்தின் பொறுப்புகளில் இருந்து அனீஸ் நீக்கப்பட்டுள்ளார்.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விசாரணை நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது எனவே இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஹரித் சபரி ஆஜராகி கன்னியாகுமரி மாவட்ட அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பணம் பெற்றதற்கான ஆடியோ ஆதாரங்கள் உள்ளது எனவே லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
அரசு தரப்பில் மனுதாரர் புகார் குறித்து உரிய துறையிடம் விவரம் கேட்கப்பட்ட உள்ளது பதில் மனுதாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரப்பட் டது.
அப்போது நீதிபதி அரசு வழக்கறிஞர் பணியாளர் விற்பனை செய்தது என கேள்வி எழுப்பினார்.
தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த அனீஸ் என்பவர்தான் இந்த வேலையை செய்துள்ளார் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிறகு நீதிபதி அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் பெறப்பட்டது என்ற புகார் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டு ஏன் விசாரணை செய்ய வில்லை புகார் வந்தால் விசாரிக்கமாட்டீர்களா என கேள்வி எழுப்பினார். லஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் எனவே இரண்டு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
லஞ்சம் கொடுத்துவிட்டு இவர்கள் அரசு வழக்கறிஞர்களாக வர வேண்டுமா? இவர்கள் எல்லாம் நாட்டை காப்பாற்றுவார்களா அல்லது சட்டத்தைப் பாதுகாப்பார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த புகார் மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.