சென்னை,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்குவதா? கூட்டணி கட்சிக்காக சட்டம்-ஒழுங்கை பணயம் வைக்கும் தவெக அரசு என்று பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை கார்த்திகை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தீர்ப்பை எதிர்த்து மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
காலையில் பேரணிக்கு அனுமதி மறுத்த மதுரை காவல்துறை, சில மணி நேரங்களிலேயே ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அவசரமாக அனுமதி வழங்கியது யாருடைய அழுத்தத்தால்? சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி பேரணிக்கு தடை விதித்த காவல்துறை, ஆளும் தவெக அரசின் கூட்டணி கட்சியான விசிகவுக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்திருப்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும்.
நாளை கார்த்திகை தீப திருநாள் நடைபெறவுள்ள சூழலில், மதுரையின் அமைதியை குலைக்கும் இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை தவெக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். கூட்டணி நெருக்கடிகளுக்கும் வாக்கு வங்கி அரசியலுக்கும் அடிபணியாமல், சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி நாளை தீபத்தூணில் எவ்வித தடையுமின்றி தீபம் ஏற்றப்படுவதையும் முழுமையான பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.