சென்னை,
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு சென்னை மாநகரம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆர்.கே.நகர் பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி யுவஸ்ரீ என்ற 14 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து, கூட்டத்தை சரியாக ஒருங்கிணைக்காமல் இருந்ததால், தன் மகள் இறந்து விட்டாள் என்றும், இதற்காக தனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில், சிறுமி யுவஸ்ரீயின் தந்தை பி.வடிவேலு வழக்கு தொடர்ந்தார்.
அதில், "நிவாரணம் வாங்க அதிகளவில் கூட்டம் கூடும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும் போலீசாரும், அரசு நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. நிவாரண உதவி வழங்க முறையான ஏற்பாடுகளை செய்திருந்தால் எனது மகள் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து இருக்கமாட்டார்.
கூலித்தொழிலாளியான எனக்கும், எனது குடும்பத்துக்கும் எங்களது மகளின் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதால், இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது ஷபீக், "அரசியல் கட்சிகள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஏற்படும் அசம்பாவிதங்களில் பலியானவர்களுக்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமா? என்பது குறித்து தமிழ்நாடு அரசும், அதிமுகவும், 2 வாரத்துக்குள் பதில் அளிக்கவேண்டும்" என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.