மதுரை,
இறந்தவர்கள் ஆன்மாவை திருப்தி செய்கிறோம் என பொருட்களை ஆற்றில் வீசுவதா? எனக்கூறி அதிருப்தி தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள். பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்க இருப்பதாகவும் அதிரடியாக அறிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிவானுபாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள ஆனந்த விலாஸ் மண்டபத்தில் இருந்து எங்களை வெளியேறுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்த வழக்கு விசாரணையின்போது. பாபநாசம் முதல் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கான சடங்குகளை செய்வதற்காக கூடுகிறார்கள் என்று தாமிரபரணி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சடங்குகளின்போது. ஆடைகள், துண்டுகள், செருப்புகள், இறந்தவர்களின் பொருட்களை ஆற்றில் வீசும் வழக்கம் உள்ளது. தாமிரபரணியில் டன் கணக்கில் வீசப்பட்ட ஆடைகள் அகற்றப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆறு 2 வகையான ஆமைகளின் வாழ்விடமாக உள்ளது. இவற்றின் சராசரி ஆயுட்காலம் நூறு ஆண்டுகளுக்கு குறையாது. ஆனால், ஆமைகள் ஆற்றில் வீசப்பட்ட ஆடைகளில் சிக்கி இறக்கின்றன. புகைப்படங்களின் சட்டங்களைக்கூட ஆற்றில் வீசுவதால் கண்ணாடி உடைந்து நீர்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இதுசம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாசுபடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. மதத்தின் பெயரால்கூட நீர்நிலையை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை என்பதை சட்டம் உறுதிப்படுத்துகிறது. நீர்நிலையை அழித்து வருவதால், நாங்கள் இதில் தலையிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இறந்தவர்களின் ஆன்மாக்களை திருப்திப்படுத்துகிறோம் என பொருட்களை ஆற்றில் வீசுவதா? இந்த பழக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமலும், மற்றவர்களின் உரிமைகளை மீறாமலும் ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்களுக்கு பயனளிக்கும் செயல்களை செய்யலாம். ஆனால் இறந்தவர்களுக்கு சடங்குகளை செய்வதற்காக கோடிக்கணக்கான மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வற்றாத ஜீவநதியாக திகழும் தாமிரபரணி ஆறு மாசுபடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
இந்த வழக்கை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றையதினம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பிப்போம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.