தமிழக செய்திகள்

ஆன்மிகமும் அரசியலும் வெவ்வேறானவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா? - வானதி சீனிவாசன்

முதல்-அமைச்சருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் 'அரோகரா' என முழக்கமிட்டது கண்டனத்திற்குரியது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

சென்னை,

ஆன்மிகமும் அரசியலும் வெவ்வேறானவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

'அரோகரா'

இது தொடர்பாக, பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கடவுளைப் போற்றும் அரோகரா கோஷம்... அரசியல் தனிநபர் துதிக்கானதா?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, வர்ணனையாளர்கள் மற்றும் பாடல் குழுவினர் தமிழக முதல்-அமைச்சருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் 'அரோகரா' என முழக்கமிட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சிக்குரியதும் கண்டனத்திற்குரியதுமாகும்.

எந்த வகையில் நியாயம்?

முருகப்பெருமானைப் போற்ற வேண்டிய புனிதமான அரோகரா கோஷத்தை, அரசியல் தலைவர்களின் புகழ்பாடுவதற்குப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? லட்சக்கணக்கான முருக பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் முழங்கும் இறைநாமம்தான் கிடைத்ததா?

ஆன்மிகமும் அரசியலும் வெவ்வேறானவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?

புனிதமான திருவிழா

லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் விரதமிருந்து வழிபடும் ஒரு புனிதமான திருவிழாவில், இறைவனைப் போற்றும் கோஷத்தைத் தனிநபர்களுக்கான புகழுரையாக மாற்றியிருப்பது இந்து சமய மரபுகளையும், முருக பக்தர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயலாகும்.

சம்பந்தப்பட்ட வர்ணனையாளர்கள் தங்களது செயலுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT