தமிழக செய்திகள்

சொகுசு காரில் கொண்டு செல்லப்பட்ட 12 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் கடந்த 15-ந்தேதி வெளியிட்டார். இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இதையடுத்து வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தொகுதியான, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஐஸ் அவுஸ் போலீஸ் ஸ்டேஷன் அருகில், தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வெள்ளிப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.