சென்னை,
முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து, இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த அதிரடிப்படையில் இடம்பெறும் பெண் போலீஸ் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நீல நிற சட்டை, காக்கி நிற பேண்ட் என சிறப்பு சீருடை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கருப்பு நிற தொப்பியும், கருப்பு நிற ஷூவும் வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை கடந்த 29-ந்தேதி அன்று முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதல்-அமைச்சர் விஜய் இன்று (செவ்வாய்க்கிழமை ) மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னையில் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தவுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தங்கள் பணியை தொடங்க உள்ளனர்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள்:-
* பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல்
* பொறுப்புடைய அனைவரையும் ஒருங்கிணைத்து, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குதல்
* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மக்கள் இயக்கமாகச் செயல்படுதல்
* பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ளுதல்
* குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல்
* காவல்துறையின் இருப்பை உறுதிசெய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல்