தமிழக செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்?

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை வரும் 9-ஆம் தேதி முதல்- அமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த அதிரடிப்படையில் இடம்பெறும் பெண் போலீஸ் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சிறப்பு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் உள்ள பெண் சப்-இன்ஸ்பெக்டர் அணிந்துள்ள சீருடைதான் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் இடம்பெறும் போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அணியும் சீருடையாக அறிமுகப்படுத்தப்படும் எனத்தெரிகிறது. இந்த திட்டம் கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் அமைச்சர் விஜய்யால் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியானது.

அதற்கான முழு ஏற்பாடுகளும் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்று வந்தது. ஆனால், திடீரென அந்த நிகழ்ச்சி ரத்தானது. இந்த நிலையில் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் நாளை மறுநாள் துவங்கி வைக்கப்படும் எனத்தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் காவல் உயர் அதிகாரிகளை மேற்பார்வையிட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருவதாகவும், சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை கூட முதல் அமைச்சர் விஜய் இன்னும் தொடங்கி வைக்கவில்லை என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும்சூழலில் இந்த திட்டம் இரண்டு நாட்களில் தொடங்கி வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது