சென்னை,
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்த பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்களர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.இதில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக் கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட் சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர். இணையதளம் வழியாக வாக்காளர் பெயர் சேர்க்க 5.74 லட்சம், நீக்கம் கோரி 15,935, திருத்தம் கோரி 4.38 லட்சம் என 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி இன்று நிறைவு பெறுகிறது.
தற்போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.