தமிழக செய்திகள்

சீர்காழி: என்ஜினீயர் வீட்டில் 5 பவுன் நகைகள்; 5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடங்கிய டி.வி.ஆர். கருவியையும் மர்ம நபர்கள் திடுடி எடுத்துச்சென்றிருப்பது தெரியவந்தது.

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி வி.எஸ்.ஆர். நகரில் வசித்து வருபவர் வீரபத்ரன் (வயது 41). என்ஜினீயர். இவர் நேற்று முன்தினம் காலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக தனது மனைவியுடன் சென்றிருந்தார். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த தோடு உள்பட 5 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை.

போலீசார் விசாரணை

வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் வீரராகவன் மற்றும் சிறப்பு தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடங்கிய டி.வி.ஆர். கருவியையும் மர்ம நபர்கள் திடுடி எடுத்துச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வீரபத்ரன் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.