தமிழக செய்திகள்

பெண்கள் பாதுகாப்பு குறித்து தவெக அரசிடம் கேள்விகளை முன்வைத்த வானதி சீனிவாசன்

த.வெ.க-வில் பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளுக்கு ஆதரவளிக்கும் அந்த "மேலிடம்" யார்? என வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சேலம்,

பெண்கள் பாதுகாப்பு குறித்து பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்து இருப்பதாவது;

"சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ஆபாசமாக வீடியோ எடுத்து, தங்களது கட்சிப் பிரமுகர் ஒருவர் மிரட்டியதாக வெளிவந்துள்ள செய்தியை முதல்-அமைச்சர் விஜய் அறிவீர்களா?

ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் பல்லி, கழனிப் பானையில் விழுந்தததாம் துள்ளி என்னும் கதையாக, "தூய சக்தி, மாற்று சக்தி" என்று முழங்கிவிட்டு, பெண்கள் விரோத திமுகவின் புது வெர்ஷனாகவே தங்களது த.வெ.க முளைத்துள்ளதே, இதற்கு என்ன பதில்? கடந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே ஆலந்தூர் வேம்புலி, சேலம் மணிகண்டன் எனத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை களவாடும் நபர்கள் அனைவரும் த.வெ.க-வைச் சார்ந்தவராக இருக்கும் நிலையில், இன்னும் எத்தனை எத்தனை கொடூரர்களை தவெக வளர்த்து வருகிறது? த.வெ.க-வில் பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளுக்கு ஆதரவளிக்கும் அந்த "மேலிடம்" யார்?”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.