கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சிவகங்கை: ஆடு மேய்க்க சென்ற 7-ம் வகுப்பு மாணவி ஊருணியில் பிணமாக மிதந்ததால் பரபரப்பு

சிவகங்கையில் ஆடு மேய்க்க சென்ற சிறுமி ஊருணியில் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள மேலப்பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜராஜசோழன். இவரது மகள் அபிநயா (12 வயது). 7-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அபிநயா தனது தாயுடன் ஆடுமேய்க்க சென்றார். அப்போது ஆடுகளை கவனித்து கொள்ளுமாறு கூறிவிட்டு சிறுமியின் தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

ஆனால், சிறுமி மாலை வரை வீடு திரும்பவில்லை. ஆடுகள் மட்டும் வீட்டுக்கு வந்துள்ளன. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அபிநயாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஊருணி தண்ணீரில் சிறுமி பிணமாக மிதந்தாள். இதுகுறித்து மதகுபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் இறப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான், சிறுமி சாவுக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் கூறினர்.