சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் தினேஷ். இவர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி யாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேணுகா தேவி (வயது 26). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 3 வயதில் ரித்திஷா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த ரேணுகாதேவி, சிவகாசி மணிநகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் பிரசவத்தின்போது ரேணுகாதேவிக்கு உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத நிலையில் பரிதாபமாக இறந்தார். அவர் வயிற்றில் இருந்த சிசுவும் இறந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த ரேணுகாதேவியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து குடும்பத்தினரும், உறவினர்களும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களின் அலட்சியத்தால் தாயும். குழந்தையும் உயிரிழந்ததாக அங்கிருந்த ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்து பல்வேறு பகுதியில் இருந்தும் ரேணுகாதேவியின் உறவினர்கள் திரண்டு வந்து. தனியார் ஆஸ்பத்திரி முன் குவிந்தனர். ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்தும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ரேணுகாதேவி குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஏராளமான போலீசார் ஆஸ்பத்திரி முன்பு குவிக்கப்பட்டனர். சுமார் 5 மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.