தமிழக செய்திகள்

சென்னை வங்கியில் ரூ.3.15 கோடி நகைகள் திருட்டு வழக்கில் 6 ஊழியர்கள் கைது

பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் நகை திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை,

சென்னை அயனாவரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் பொதுமக்கள் அடமானம் வைத்த ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகளை அந்த வங்கியின் மேலாளரே திருடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. உண்மையான அடகு நகைகளை திருடிவிட்டு, அதற்கு பதில் போலியான நகைகளை வைத்து நூதன திருட்டு நடந்தது.

இதுதொடர்பாக, வங்கி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வங்கியின் மேலாளரை கைது செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையிலும் இதுபோன்ற ஒரு அடகு நகை திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறிப்பிட்ட அந்த வங்கியில் பணியாற்றும் மேலாளர்கள் உள்பட ஊழியர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொதுமக்கள் அடகு வைத்த உண்மையான நகைகளை திருடிவிட்டு, அவற்றிற்கு பதில் போலி நகைகளை வைத்துள்ளனர். இந்த வங்கியிலும் ரூ.3.15 கோடி அளவிற்கு அடமான நகைகள் திருடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வங்கி ஊழியர்களான புழல் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (வயது 58), கொரட்டூரைச் சேர்ந்த சரவண பாபு (58), கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்த கோபிகா (30), மணலி சேக்காடு பகுதியைச் சேர்ந்த துரைபாபு ஜனார்த்தனன் (50), புரசைவாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (36) மற்றும் சுனிதா (51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் புருஷோத்தமன் உதவியாளராக உள்ளார். சரவண பாபு சீனியர் மேலாளராக உள்ளார். கோபிகா துணை மேலாளராகவும், துரைபாபு ஜனார்த்தனன் மேலாளராகவும், விக்னேஷ் தூய்மை பணியாளராகவும், சுனிதா குமாஸ்தாவாகவும் பணியாற்றினார்கள். கைதான இவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT