தமிழக செய்திகள்

செஞ்சி சிறுமி மாயமான பகுதியில் எலும்பு கூடு கண்டெடுப்பு

சிறுவாடி காப்பு காடு பகுதியில் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்,

பரதன் தாங்கல் ஏரி அருகே முட்புதரில் மனித எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவை சேர்ந்தவர்கள் வடிவேலு-பவானி தம்பதி.

பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மாயம்

இவர்களின் 2-வது மகள் 7 வயது சிறுமி. கடந்த மாதம் 11-ந் தேதி இரவு தனது பிறந்தநாளை கொண்டாடி விட்டு, பெற்றோருடன் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலை மாயமானார்.

முதலில் இந்த வழக்கை சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படை அமைத்து தேடினர். எந்த துப்பும் கிடைக்காததை தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டிக்கு வழக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 22 நாட்களுக்கும் மேலாக ஆலம்பூண்டி கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இந்த நிலையில், சென்னை சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. விக்ரமன் நேற்று ஆலம்பூண்டி கிராமத்திற்கு நேரில் வந்து சிறுமியின் தந்தை வடிவேலு, தாய் பவானி, பாட்டி மற்றும் எதிர்வீட்டுப் பெண் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி அவர்களிடம் வாக்குமூலம் பெற்றார்.

இதனை தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. விக்ரமன் சென்றார். அங்கு விசாரணை அதிகாரிகளான டி.எஸ்.பிக்கள் வேல்முருகன், கீதா ஆகியோரிடம் இதுவரை வழக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

தொழில்நுட்ப ரீதியிலான விசாரணை

இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இதில், இதுவரை விசாரிக்கப்பட்ட நபர்கள், சேகரிக்கப்பட்ட தடயங்கள், கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையின் முன்னேற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், இதற்கு அடுத்தபடியாக வழக்கை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து டி.எஸ்.பி.க்களுக்கு டி.ஐ.ஜி. ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. புதிய கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தவும், சந்தேகத்திற்குரிய நபர்களை மீண்டும் விசாரிக்கவும் அவர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து நேற்று முதல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முற்றிலும் தீவிரமாக தொடங்கியுள்ளனர்.

கூடுதல் அதிகாரிகள் நியமனம்

இதற்கிடையே இந்த வழக்கில் விசாரணையை துரிதப்படுத்தும் வகையில் கூடுதலாக 2 சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் குமார், சாஸ்தா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 33-வது நாளாக இன்று செஞ்சி ஆலம்பூண்டி பகுதியில் முகாமிட்டு சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முட்புதரில் மனித எலும்பு கூடு

இந்த நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் செஞ்சி அடுத்த சிறுவாடி காப்புக்காடு வனப்பகுதியில் சிறுமியை தேடும் பணியை மேற்கொண்டனர். அப்போது சிறுமி மாயமான பகுதியில் உள்ள பரதன் தாங்கல் ஏரி அருகே முட்புதரில் மனித எலும்பு கூடு கண்டெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட எலும்பு கூடு யாருடையது? என்பது குறித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுவாடி காப்பு காடு பகுதியில் மேலும் சிறு தடயங்கள் கிடைக்குமா என்று சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர், கிராம மக்கள் எதிர்பார்ப்பு

சிறுமி மாயமாகி 33 நாட்களை கடந்தும் இன்னும் சிறுமி பற்றிய எந்த தகவலும் தெரியாது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சி.பி.சி.ஐ.டி. டிஐஜியின் நேரடி வருகையும், ஆலோசனையும் வழக்கில் விரைவில் திருப்பத்தை ஏற்படுத்தும் என கிராம மக்களும், சிறுமியின் பெற்றோர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT