கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மந்தம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

சென்னை,

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் மந்தமான நிலை நீடித்து வருகிறது. இதனால் ஒரு லட்சம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கலந்தாய்வு

தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 181 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு இடங்களுக்கான, 2026-27ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

73.74 சதவீத இடங்கள்

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில், இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி, இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 1 லட்சத்து 29 ஆயிரத்து 929 இடங்களில், மாணவர்கள் 40 ஆயிரத்து 261 பேர்; மாணவியர் 55 ஆயிரத்து 174 பேர்; மூன்றாம் பாலினத்தவர்கள் 26 பேர் என, மொத்தம் 95 ஆயிரத்து 461 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அதாவது, 73.74 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன.

மாணவர் சேர்க்கை மந்தம்

பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள், கடந்த 30-ம்தேதி வெளியான நிலையிலும், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் மந்தமான நிலை நீடித்து வருகிறது. ஒரு லட்சம் இடங்களை நிரப்ப வேண்டும் என்ற இலக்கை அடைவதில், உயர்கல்வித் துறைக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ஆண்டு வாரியாக மாணவர் சேர்க்கை விபரம்:

கல்வியாண்டு - கல்லுாரி எண்ணிக்கை - மொத்த இடம் - நிரம்பிய இடம்

2024-25 - 172 - 1,07,299 - 98,885

2025-26 - 181 - 1,31,034 - 1,03,280

2026-27 - 181 - 1,29,929 - 95,461