தமிழக செய்திகள்

மெதுவாக நகரும் ‘அக்வான் புயல்’... சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 23-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலவும் 'அக்வான்' புயல் 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதால் சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அக்வான்' புயல்

தெற்கு வங்கக்கடலில் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடலில் நிலவும் 'அக்வான்' புயல், மெதுவாக வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நேற்று அதிகாலை நகர்ந்தது. இது சென்னைக்கு கிழக்கே சுமார் 610 கி.மீ. தொலைவில் மையம் கொண்டது.

வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை மத்திய-மேற்கு வங்கக்கடற்பகுதியில் தீவிர புயலாக வலுப்பெற்றது. தற்போதைய நிலவரப்படி 3 கி.மீ. வேகத்தில் அக்வான் புயல் நகர்ந்து வருகிறது. அதனைத்தொடர்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (வியாழக்கிழமை) காலை மிகத் தீவிர புயலாக மேலும் வலுப்பெறக்கூடும்.

ஆந்திர கடற்கரை

தொடர்ந்து வடமேற்கு திசையிலேயே நகரும் இந்தப் புயல், வருகிற 20-ந் தேதி நண்பகலில், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் விசாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை தீவிர புயலாக கடக்க வாய்ப்புள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. முதல் 130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 145 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகம், ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

கனமழை

மேலும் நாளை (வியாழக்கிழமை) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தொடர்ந்து வருகிற 23-ந் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு

வடகிழக்குப் பருவமழையில் கடந்த 'அர்னாப்', 'முரசு' ஆகிய 2 புயல்களும் ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தபோது தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த 'அக்வான்' புயலும் மழையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT