சென்னை,
நெல்லை மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் அரசு பள்ளியில், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ-மாணவிகள் இந்த இன்ப அதிர்ச்சி பயணத்தை மேற்கொண்டனர். இவர்களுக்கு இந்த ஆச்சரியமான பரிசை வழங்கி உற்சாகப்படுத்தியவர், முன்னாள் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எல். சவுந்தரராஜன் ஆவார்.
பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த, கிராமப்புற பின்னணியில் இருந்து வந்த இந்த 15 மாணவ-மாணவிகளுக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சவுந்தரராஜன்சென்னைக்கான விமான பயணச் சீட்டுகளை வழங்கினார். இவர்களுடன் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமன்றி, கூலியன்குளம், தெற்கு கருங்குளம் போன்ற சுற்றுவட்டார பகுதி அரசு பள்ளி மாணவர்களும் இந்த வாய்ப்பை பெற்றனர்.
வழக்கமாக பள்ளியில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பணம் அல்லது ஏதாவது பரிசு பொருட்களை வழங்குவார்கள். ஆனால், அவர்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஓர் அனுபவத்தை பரிசாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த சவுந்தரராஜன்,ஆகாயத்தில் மட்டுமே பார்த்த விமானத்தில் பயணிப்பதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையம் வந்த இந்த மாணவிகள், இதுவரை வானத்தில் பறந்த விமானத்தை மட்டுமே பார்த்தவர்கள். முதன்முறையாக தரையில் நின்றுகொண்டிருந்த அந்தப் பெரிய உருவத்தைக் கண்டு வியந்தனர். விமானத்தின் அருகில் நின்று பார்ப்பது மட்டுமன்றி, முதல்முறையாக அதில் பறக்க போகிறோம் என்ற உற்சாகத்தில் அவர்கள் காணப்பட்டனர். அடுத்த சில நிமிடங்களில், அவர்கள் அனைவரும் அந்த விமானத்தில் ஏறி சென்னைக்கான பயணத்தை தொடங்கினர்.
அந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு துணையாக மூன்று ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று பிற்பகல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தடைந்தனர். சென்னையில் தங்கியுள்ள அவர்களை, இன்று மாமல்லபுரம் (மகாபலிபுரம்) மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அழைத்து சென்றனர். நாளை அண்ணா பல்கலைக்கழகம், பிர்லா கோளரங்கம், அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்கின்றனர். மூன்று நாட்களும் சென்னையை சுற்றி பார்த்துவிட்டு, நாளை மறுநாள் வந்தே பாரத் ரெயிலில் நெல்லைக்கு திரும்புகின்றனர். இதற்கான முழு செலவையும் சௌந்தரராஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.