தமிழக செய்திகள்

அனுமதிச்சீட்டு இல்லாமல் 14 டன் எம்.சாண்ட் மணல் கடத்தல்: டிப்பர் லாரி பறிமுதல்- ஓட்டுநர் கைது

தூத்துக்குடி புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்குளம் விலக்கு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் உரிய அரசு அனுமதிச்சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக எம்.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியைக் கைப்பற்றிய அதிகாரிகள், லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகன சோதனை

தூத்துக்குடி புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தனி வருவாய் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில், இளநிலை ஆய்வாளர் அக்கினிபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்குளம் விலக்கு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

டிப்பர் லாரி பறிமுதல்

அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த சோதனையில் உரிய அரசு அனுமதிச்சீட்டு எதுவும் இல்லாமல் சுமார் 14 டன் எம்.சாண்ட் மணல் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை மேல் நடவடிக்கைக்காக கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஓட்டுநர் கைது

சுரங்கத்துறை அதிகாரிகளின் புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிப்பர் லாரியை ஓட்டி வந்த தெற்கு கோனார்கோட்டையைச் சேர்ந்த மூக்கையா (வயது 51) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT