பாம்புகள் கடத்தல் 
தமிழக செய்திகள்

பாங்காக்கில் இருந்து பாம்புகள் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் 2 பேர் கைது

23 பாம்புகள், 16 மலைப்பாம்புகள், 5 தேகு, மற்றும் ஒரு வெள்ளை உடும்பு உட்பட மொத்தம் 45 ஊர்வன உயிரினங்கள் உயிருடன் மீட்கப்பட்டன.

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையம் வழியாக வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 45 அரிய வகை ஊர்வன உயிரினங்களை, விமான புலனாய்வு பிரிவினருடன் இணைந்து வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இந்திய பயணிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உளவுத்துறை தகவல்

வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரிய வகை வனவிலங்குகள் மற்றும் ஊர்வன உயிரினங்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சோதனை

அதன்பேரில், கடந்த 26-ஆம் தேதி தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு வழியாக திருச்சி வந்திறங்கிய விமானத்தில் பயணித்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த இரண்டு இந்திய பயணிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர்.

உணவு பொட்டலங்களில் விலங்குகள்

அவர்களுடைய உடைமைகளை விரிவாக சோதனை செய்தபோது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கொண்டு வந்த பைகளில் இருந்த 27 உணவு பொட்டலங்களுக்குள் அரிய வகை வனவிலங்குகளை உயிருடன் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றிலிருந்து 23 பாம்புகள், 16 மலைப்பாம்புகள், 5 தேகு, மற்றும் ஒரு வெள்ளை உடும்பு உட்பட மொத்தம் 45 ஊர்வன உயிரினங்கள் உயிருடன் மீட்கப்பட்டன.

2 பயணிகள் கைது

இதையடுத்து, சட்டவிரோதமாக வனவிலங்குகளை கடத்தி வந்த குற்றத்திற்காக 1962-ம் ஆண்டு சுங்க சட்ட விதிகளின்படி அந்த இரண்டு இந்திய பயணிகளையும் அதிகாரிகள் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட அரிய வகை ஊர்வன உயிரினங்கள் அனைத்தும் மேல் விசாரணைக்காக திருச்சி விமான புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT