தமிழக செய்திகள்

ரோப் கார் திட்டத்துக்காக சென்னை மெரினா கடற்கரையில் மண் பரிசோதனை

ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தயாரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை,

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரையில் ரோப் கார் சேவையை கொண்டுவர சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. 2022-ம் ஆண்டு முதல் இதற்கான ஆலோசனைகளும், ஆய்வு பணிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், முதற்கட்டமாக உழைப்பாளர் சிலை முதல் கலங்கரைவிளக்கம் வரையில் ரோப் கார் திட்டப் பணிகளுக்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க கடந்த 2024-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியது. இதையடுத்து, ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தயாரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பான பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், ரோப் கார் திட்டத்துக்காக மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் தனியார் நிறுவனம் சார்பில் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 5-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 30 அடி அளவில் பள்ளம் தோண்டி பணிகளை மேற்கொண்டனர்.

இந்த பணி குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த நொச்சிக்குப்பம் மீனவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களிடம், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி இல்லாமால் கடற்கரையில் எப்படி பணிகளை மேற்கொள்ள முடியும்? என கேள்வி எழுப்பியவாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மண் பரிசோதனையில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் பணிகளை நிறுத்திவிட்டு புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "மெரினா கடற்கரை யில் வர இருக்கும் ரோப் கார் திட்டத்துக்காக தனியார் நிறுவனம் சார்பில் மண் பரிசோதனை பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த பணியை திடீரென மீனவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். எனவே, அடுத்த கட்டமாக போலீசார் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். மண் பரிசோதனை செய்து, அந்த அறிக்கையை கடலோர ஒழுங் குமுறை ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் " என்றனர்.