சென்னை,
வீடுகளின் மேற்கூரையில் சூரிய சக்தி மின்தகடுகள் நிறுவுவதை ஊக்குவிக்க 2024 பிப்ரவரியில் 'பி.எம். சூர்யகர்' எனப்படும் பிரதம மந்திரி சூரிய சக்தி வீடு இலவச மின்சாரத் திட்டம் தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதே இதன் நோக்கம். மாதாந்திர மின்நுகர்வுக்கேற்ப 1 முதல் 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் சோலார் திறன் அமைக்க ரூ.30 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.78 ஆயிரம் வரை மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
திட்டம் தொடங்கப்பட்டு 33 மாதங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை 91.94 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 57.78 லட்சம் விண்ணப்பங்கள் சூரிய மின்தகடுகள் பொருத்த ஏற்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட 68.09 லட்சம் வீடுகள் (68 சதவீதம்) பயனடைந்துள்ளன. மானியமாக ரூ.37,783.35 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இவற்றில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் அதிக வீடுகள் பயனடைந்துள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 1,45,442 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1,20,131 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டதன் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட 1,38,276 வீடுகளுக்கு இத்திட்டம் சென்றடைந்துள்ளது.