சென்னை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லாமல் த.வெ.க. உள்ளது. இதனால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி, த.வெ.க.வுக்கு இன்று தன்னுடைய ஆதரவை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த இழுபறியான சூழலில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, எனக்கு தேர்தல் தொடர்பாக சில சந்தேகங்கள் எழுந்நதுள்ளன. தொடக்கம் முதல், சிறப்பு தீவிர சீர்திருத்தம் நடந்தது முதல், நிறைய விசயங்கள் நடந்துள்ளன என்றார். சில தொகுதிகளில் வி.வி.பேட் இயந்திரத்தின் சீட்டுகளை சரிபார்க்க விரும்புகிறேன்.
இதற்காக கட்சியின் தலைமையிடம் நான் பேசியுள்ளேன். ஏனெனில், எங்களுடைய தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதிக்கு சென்றபோது மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். மு.க. ஸ்டாலிலின் தோல்வியை அறிந்து அதிர்ந்து விட்டனர்.
ஏனெனில், கொளத்தூர் தொகுதிக்காக அவர் நிறைய நல்ல பணிகளை செய்திருக்கிறார். அவர் அடிக்கடி தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து வந்தவர். அப்படியிருக்கும்போது, இது எப்படி நடந்திருக்க முடியும் என்று நாங்கள் சிந்தித்து வருகிறோம். என்ன தவறு நடந்து விட்டது என நாங்கள் பார்த்து வருகிறோம் என்று கூறினார்.