தமிழக செய்திகள்

‘பெண்கள் குறித்து இழிவாக பேசுவதற்கு சில கட்சிகளில் தனி படையே வைத்திருக்கிறார்கள்’ - பெ.சண்முகம்

எதிர்க்கட்சி தலைவர் தனது பொறுப்பை உணர்ந்து பேசியிருக்க வேண்டும் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மார்கசிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பொதுவெளியில் பேசும்போது, அதுவும் அரசியல் கட்சி தலைவர்கள் பேசும்போது நாகரிகத்துடன் பேச வேண்டும். யாராக இருந்தாலும் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்.

இத்தகைய முறையில் யார் பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது. எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் அவருக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து அவர் பேசியிருக்க வேண்டும். அதை நாங்கள் அனைவருமே கண்டித்திருக்கிறோம்.

பெண்களை இழிவுபடுத்துவது, பெண்களை இழிவாக பேசுவது என்பது நீண்ட காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இடதுசாரிகளை பொறுத்தவரை பெண்களின் உரிமை தொடர்பான பிரச்சினைகளை மிகவும் எச்சரிக்கையோடு அணுகுகிறோம். ஆனால் சில கட்சிகளில் பொதுக்கூட்டங்களில், பொது இடங்களில் பெண்களை இழிவாக பேசுவதற்கு தனி படையே வைத்திருக்கிறார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.