தமிழக செய்திகள்

ரூ.1.5 கோடியில் மாமனாருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய மருமகன்

ரியல் எஸ்டேட் அதிபரான சாரதிக்கு மாமனார் மீது அதீத பாசம் ஏற்பட்டது.

சென்னை,

கொரோனா தொற்றால் மறைந்த மாமனாருக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கோவில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தியுள்ள மருமகனின் செயல் தமிழகம் முழுவதும் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் ஊராட்சியைச் சேர்ந்தவர் பெரியநாயகம். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் போது, கடுமையான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரது திடீர் மறைவு குடும்பத்தினர் மத்தியில் ஆறாத் துயரத்தை ஏற்படுத்தியது. மறைந்த பெரியநாயகத்திற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் இவரது மகள் அனிதா என்பவரின் கணவர்தான் சாரதி பெரியநாயகம்.

மாமனார் பெரியநாயகம் மீது அளப்பரிய அன்பும் பாசமும் கொண்ட மருமகன் சாரதி, அவரை வெறும் குடும்ப உறவாக மட்டும் பார்க்காமல், தங்களது குடும்பத்தின் குலதெய்வமாகவும், வழிகாட்டியாகவும் கருதி வந்தார். தங்களை வழிநடத்திய மாமனாரின் மறைவைத் தாங்க முடியாத சாரதி, அவரது நினைவை என்றென்றும் நிலைநிறுத்தும் வகையிலும், குடும்பத்தினர் மற்றும் அடுத்த தலைமுறையினர் அவரை வணங்கும் வகையிலும் ஒரு நினைவுக் கோவிலை எழுப்ப முடிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, ஐயப்பன்தாங்கல் பகுதியில் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கோவில் கட்டுமானப் பணிகளை சாரதி முன்னெடுத்தார். வெண்மை நிறத்தில் பளிங்கு கற்கள் மற்றும் அழகிய தூண்களுடன் பாரம்பரிய கோவில் வடிவில் கட்டப்பட்ட இந்தக் கோவிலின் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.

இதையடுத்து, ஆகம விதிகளின்படி ஆலயத்தில் குடமுழுக்கு விழா மிக விமரிசையாக நடைபெற்றது. இதற்காக யாகசாலைகள் அமைக்கப்பட்டு, வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை முழங்க சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுரக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் இனிதே நிறைவேற்றப்பட்டது.

கோவிலின் கருவறையில் மாமனார் பெரியநாயகத்தின் உருவத்தை நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிற்பக்கலைக்கு பெயர்போன கும்பகோணத்தில் இருந்து, சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 அடி உயர முழு உருவச் சிலை தத்ரூபமாகச் செதுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது.

கும்பாபிஷேகம் தினத்தன்று அந்தச் சிலைக்குப் பால், தயிர், சந்தனம், பன்னீர்உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குடும்பத்தினர் அனைவரும் கண்ணீர் மல்க கைகூப்பி அவரை வழிபட்ட காட்சி காண்போரைக் கண்கலங்கச் செய்தது. இப்படி ஒருமருமகன் இவருக்கு கிடைத்து இருகிறார் என்று ஊர்மக்கள் அவரை வெகுவாக புகழ்ந்துனர்.

மாமனாருக்குக் கோவில் எழுப்பியதோடு தனது கடமை முடிந்துவிடவில்லை எனக் கருதும் மருமகன் சாரதி, பெரியநாயகத்தின் நினைவாக அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

இதன் மூலம் ஆண்டுதோறும் பெரியநாயகத்தின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினங்களில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவது, கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவது போன்ற பல்வேறு சமூக நற்பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

பெற்ற தாய், தந்தைக்கு நிகராக தன்னை வழிநடத்திய மாமனாருக்குக் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ள மருமகனின் இந்த நன்றி உணர்வு, இன்றைய தலைமுறைக்கு மிகச்சிறந்து எடுத்துகாட்டா திகழ்கிறா என அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

விழாவில் பங்கேற்ற 2,000 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

SCROLL FOR NEXT