தமிழக செய்திகள்

கோவையில் காணாமல் போன மகன்.. பஞ்சாப்பில் கொத்தடிமை வாழ்க்கை - 23 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்தார்

விவசாயப் பண்ணையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரகாசம் கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்தார்.

சண்டிகர்,

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி-சுந்தரி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், கடந்த 2003-ம் ஆண்டு, இவர்களின் மூத்த மகன் பிரகாசம், அவரது 16-வது வயதில் தனது சகோதரனுடன் இரு சக்கர வாகனம் ஓட்டுவது தொடர்பாக ஏற்பட்ட சிறு சண்டையால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் பிரகாசம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதன் பின்னர் ராமமூர்த்தி-சுந்தரி தம்பதி மற்றும் அவர்களது இளைய மகன் பிரபு ஆகிய மூவரும் நீலாம்பூர் ஆச்சாங்குளத்துக்குக் குடிபெயர்ந்தனர்.

மின்சாதன உதவியாளர், காவலாளி உள்ளிட்ட பணிகளுக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்த ராமமூர்த்தி, கடந்த 2021-ம் ஆண்டில் புற்றுநோயால் இறந்துவிட்டார். இதையடுத்து சுந்தரியும், அவரது மகன் பிரபுவும் ஒரு ஓட்டு வீட்டில் வசித்தபடி, மாடு மேய்ப்பது, குத்தகை நிலத்தில் காய்கறி பயிரிடுவது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்த சூழலில், கடந்த ஜூன் மாத இறுதியில், சுந்தரியைத் தேடி வந்த திருப்பூரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் முத்தையா, அவரது மகன் பிரகாசம் பஞ்சாப்பில் ஒரு காப்பகத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். அவருடைய புகைப்படத்தைக் காண்பித்து, அலைபேசியிலும், வீடியோ காலிலும் பேசவைத்துள்ளார். அப்போதுதான் அவருடைய மகன் உயிருடன் இருந்ததே சுந்தரிக்குத் தெரியவந்தது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள அஜ்னாலா என்ற ஊரிலுள்ள ஒரு விவசாயப் பண்ணையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரகாசம் கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2022-ம் ஆண்டு பட்டியாலாவில் உள்ள அப்னா பர்ஸ் சேவா சொசைட்டி என்ற அரசு சாரா அமைப்பினர், அங்கிருந்து பிரகாசத்தை மீட்டு காப்பகத்தில் பாதுகாத்துள்ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டு அரியானா சட்டப்பேரவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் சந்தர், காப்பகங்களுக்கு சென்று கலந்தாய்வு நடத்தும்போது பிரகாசத்தை சந்தித்துள்ளார். அப்போது பிரகாசம் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசியிருக்கிறார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்ட நிலையில், தனது சொந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டம் என்பதை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பிரகாசத்தின் குடும்பத்தினரை கண்டறிய உதவி கோரப்பட்டது. இந்த தகவல் பத்திரிக்கையாளர் முத்தையாவுக்கு தெரியவந்த நிலையில், அவர் பிரகாசத்தின் சொந்த ஊருக்கு சென்று அவரது குடும்பத்தை ஒருவழியாக கண்டுபிடித்தார். பின்னர் அவர்களிடம் பிரகாசம் பஞ்சாப்பில் இருக்கிறார் என்ற தகவலை தெரியப்படுத்தினார்.

இதன் பின்னர் பிரகாசம் சுந்தரியின் மகன்தான் என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் சுந்தரியிடம் பழைய ரேஷன் கார்டு தவிர பிரகாசம் குறித்த எந்த ஆவணமும் இல்லாததால், இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டரிடம் உதவி கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேவையான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, பிரகாசம் அவரது தாயார் சுந்தரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதற்காக சுந்தரி பஞ்சாப் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு காப்பகத்தில் இருந்த தனது மகனை 23 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த சுந்தரி, அவரை கட்டியணைத்து கண்ணீர் விட்டார். இந்த சந்திப்பு அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.