புதுடெல்லி,
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக்கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 20-ந் தேதியில் இருந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பருவ நிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் கைகோர்த்துள்ளார். இதன்படி, தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் அவர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
அவருடன் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களும் குவிந்தனர். முன்னதாக, சோனம் வாங்சுக்கும், கரப்பான் பூச்சி ஜனதா தலைவர் அபிஜித் திப்கேவும் ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். சோனம் வாங்சுக்குடன் சேர்ந்து மாணவர் சங்க செயல்பாட்டாளர்கள் சிலரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.