சென்னை,
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று பல்வேறு முருகன் கோவில்களில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலில் மகா கந்த சஷ்டி விழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. 6-வது நாளான இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக நேற்றுமாலை வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர், சுவாமி உள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. இன்று காலை யாகசாலை பூஜைகளும், கலசபூஜை, பூர்ணாகுதி, கலச அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. மாலை மண்ணடியில் சூரனை வதைத்து ஆட்கொள்ளும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இன்று இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சியும், சுவாமி உள் பிரகார புறப்பாடும் நடைபெறும். நாளை காலை அபிஷேகம், மாலையில் சுவாமிக்கு திருக்கல்யாணம், இரவில் மங்கள வாத்தியம் முழங்க வாணவேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 10-ம் தேதி அன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதற்காக கேடயத்தில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் கோவிலில் இருந்து எழுந்தருளி மேற்கு ரத வீதி அருகே உள்ள சாலைக்கு வந்தடைந்தார். தொடர்ந்து அங்கு சூரனை வதம் செய்து சூரசம்கார நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அது போல் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்த திரளான பக்தர்கள் பால்குடம், மயில் காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து மேலவாசல் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். சூரசம்கார விழாவின் நிறைவு நிகழ்வாக, நாளை இரவு 7 மணிக்கு கோவிலின் விநாயகர் முருகன் சன்னதி எதிரே முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சூரசம்கார நிகழ்வை நேரில் கண்டு களித்தனர்.
குறிப்பாக சஷ்டி விரதம் இருக்கும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து படிகட்டுகள் வழியாக மலைகோவிலுக்கு சென்று சூரசம்கார நிகழ்வை நேரில் கண்டு களித்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் சிறப்பு யாகங்கள், லட்சார்ச்சனை மற்றும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டிப் பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள திண்டமங்கலம் சுயம்பு வேல்முருகன் கோயில் ஏரிக்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் சூரசம்ஹார நிகழ்வைக் கண்டு தரிசித்தனர்.
தமிழகத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகள் உள்பட இதர புகழ் பெற்ற திருத்தலங்களில் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.