தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்யுடன் சவுமியா அன்புமணி சந்திப்பு

சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு சவுமியா அன்புமணி தலைமையில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவித்தனர்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை இன்று பா.ம.க. சட்டமன்ற குழு தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அப்போது, சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு சவுமியா அன்புமணி மற்றும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவித்தனர்.

முந்தைய தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற உறுதியை கொடுக்கவில்லை என்றும், ஆனால் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற உறுதியை கொடுத்திருக்கிறார்கள் எனவும் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின்போது, “ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவிலான பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூக நீதி என்பது த.வெ.க. அரசின் அடிப்படை கொள்கை. இந்த கொள்கை மற்றும் வாக்குறுதியை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பினை மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைந்து விரைந்து முடிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னர் தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்கெடுப்பை நடத்தும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT