தமிழக செய்திகள்

ராயல் சொசைட்டியின் உறுப்பினராக அறிவிக்கப்பட்ட சவுமியா சுவாமிநாதன் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சவுமியாவுக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையிலும் மகிழ்ச்சியளிக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சவுமியா சுவாமிநாதன் புகழ்பெற்ற லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பெருமை, நம் அறிவுத்திறத்துக்கான உயர் அங்கீகாரம்!

இந்தியாவில் இருந்து இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது பெண்மணி இவர்தான் என்ற வகையில் புதிய வரலாற்றைப் படைத்து, மேலும் பல பெண்கள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிபெற சவுமியா சுவாமிநாதனின் சாதனை ஊக்கமளிக்கும்.

திராவிட மாடல் அரசின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் பங்கேற்று, நமது திட்டங்களைப் பாராட்டிப் பேசி, ஆலோசனைகளையும் வழங்கி வந்த சவுமியாவுக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையிலும் மகிழ்ச்சியளிக்கிறது.

அவரது தந்தை மரியாதைக்குரிய எம்.எஸ். சுவாமிநாதனின் அடிச்சுவட்டில் செயற்கரிய சாதனைகளைப் படைத்து வரும் சவுமியா சுவாமிநாதன் தொடர்ந்து தமது அறிவுக்கொடையை நம் மக்களின் முன்னேற்றத்துக்காக வழங்கிடுவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.